Movie prime

ட்விட்டர் சிஇஓ - எலான் மஸ்க் அதிரடி - விரைவில் பதவி விலகுவேன்!!

 
elon musk twitter
விரைவில் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவேன் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல சிக்கல்கள் நீடித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து விரைவில் விலகுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை எலான் மஸ்க், உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை முடக்கினார். அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டோணியோ குட்டரஸ் வரை பலரும் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கையை எலான் மஸ்க் கைவிட்டார்.
elon musk twitter
அந்த சூடு தணிவதற்குள் எலான் மஸ்க், கொள்கை மாற்றம் செய்கிறேன் என்ற பெயரில் அடுத்த சிக்கலில் சிக்கி தவித்து வருகிறார். மற்ற சமூக வலைதளங்களின் பதிவுகளை ட்விட்டர் தளத்தில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறு பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதுபோன்று மீள் பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க போவதாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று கேட்டு ட்விட்டர் பயனர்களை கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தார். மேலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார். அதன்படி, பயனர்களும் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்தனர். உலகம் முழுவதும் 35 கோடி பயனர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.
twitter
இந்நிலையில், எலான் மஸ்க்கின் கேள்விக்கு சுமார் ஒரு கோடியே 75 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அதில் 57 விழுக்காடு பேர் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். 43 விழுக்காடு பேர் வேண்டாம் என்றும் பதில் அளித்துள்ளனர். பயனர்களின் கருத்துக்கு தான் மதிப்பளிப்பதாக எலான் மஸ்க் முன்னரே பதிவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவேன் என்று அதிரடியாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இன்னொரு நபர் சிஇஓவாக கிடைத்தவுடன் நான் பதவி விலகுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.