தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழநாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
அதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளகுறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.