தொடர் கனமழை எதிரொலி!! நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 22 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில், நவம்பர் 14 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சுற்றி உள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதை தொடர்ந்து, நாளையும் கனமழை தொடரும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை நவம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.