மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்.
இரண்டு ஆண்டு காலமாக பள்ளிகள் அதிக நேரம் மூடப்பட்டதால் பல மாணவர்களுக்கு எழுத்துக்கள் மறந்து, கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்காமலேயே தேர்ச்சி பெற்று 3 ஆம் வகுப்புக்கு சென்ற மாணவர்களே அதிகம்.
இதன் காரணமாக, 8 வயதுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதி, படிப்பதை உறுதி செய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்பது தான் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம். இந்நிலையில், தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ்,1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கொரோனா காலத்தில் கற்றல் வாய்ப்புகளை இழந்ததால், அதை ஈடு செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, இந்த தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.