Movie prime

தமிழ்நாட்டில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!! முதல்வர் தொடங்கி வைப்பு!!

 
pongal parisu
தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ₹1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
M.K.Stalin
இதற்காக, கடந்த 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது. மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நாள்தோறும், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தலா 200 பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து, இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 33,000 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை 93 சதவீதம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று, சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகே அன்னை சத்யா நகரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
pongal parisuthokupu
அதேசமயம், பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் அட்டையை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கனை பெற்று கொண்ட நபர்கள், அதற்கான நாளில் வந்து பெற்று கொள்ளலாம். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.