இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்!!

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு ₹1000 ரொக்கம் வழங்குவதற்கு இன்று 27 ஆம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ₹1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் தொடர்ந்து நடத்திய போராட்டம் காரணமாக, பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ₹1000 பணம் பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.