போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!

தமிழகத்தின் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே நேற்று 7 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், இன்று தொடர்ந்து 2 ஆவது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. அதன் பிறகு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இனி போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
முன்னர், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 81 மாதங்களாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இது தொடர்பான தகவல் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார். இருந்தபோதும், ஒப்பந்தத்தின் ஒரு சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸ் முறையில் கிடைக்கும் ஊதிய உயர்வு குறித்த விவரமும் வெளிவந்துள்ளது. அதன்படி, பேருந்து ஓட்டுநருக்கு ₹2,012, முதல் ₹7,981 வரை உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், நடத்துநர்களுக்கு ₹1, 965 முதல் ₹6,640 வரையும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ₹2,096 முதல் ₹9,329 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அலுவலக பணியாளர்களுக்கு ₹1,965 முதல் ₹6,640 வரையும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ₹4,585 முதல் ₹8,476 வரையும் ஊதிய உயர்வு அளிக்கப்படும். பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு ₹4,692 முதல் ₹7,916 வரை ஊதியம் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.