மாணவர்கள் மகிழ்ச்சி!! ஜூலை 18 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டுக்கான கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கலை , அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 2022-2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது, செமஸ்டர் தேர்வுகள் நிறைவடைந்து, கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூலை 18 ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனை குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த குறிப்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் சென்ற கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின், ஜூலை 18 ஆம் தேதி திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. 18 ஆம் தேதி முதல் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.
இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.