பள்ளி பேருந்தில் திடீர் புகை!! 2 மாணவிகள் மயக்கம்!!

தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு பள்ளி வாகனம் மூலம் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மாணவிகளை அழைத்து வருவது வழக்கம்.
இன்று காலை குளத்தூர், தருவைகுளம், தாளமுத்து நகர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 80 மாணவிகளை அழைத்து கொண்டு பள்ளி வாகனம் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. தூத்துக்குடி பூபால் ராயபுரம் அருகே வாகனம் வரும் பொழுது திடீரென்று வாகனத்தில் இருந்து அதிகளவில் புகை வந்துள்ளது.
இந்த புகை பேருந்திற்கு உள்ளேயும் புகுந்ததால் பேருந்தில் இருந்த 2 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக வாகனத்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி மற்ற மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட்டு அருகில் உள்ள வீடு ஒன்றில் அமர வைத்துள்ளார். மயக்கம் அடைந்த 2 மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு திடீரென்று பள்ளி வாகனத்தில் கட்டுக்கடங்காத புகை ஏற்பட்டு மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.