உஷார்!! தமிழ்நாட்டில் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை!!

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இருந்த போதும், காய்ச்சல் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அதிகமாக பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சல் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் வகை - லேசான காய்ச்சல், இருமல் இருக்கும் என்றும், 2 ஆம் வகை - தீவிர காய்ச்சல், அதிக இருமல் இருக்கும் என்றும், 3 ஆம் வகை - தீவிர காய்ச்சல், தொண்டை வலி மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதல் 2 வகை பிரிவினர் இன்புளுயன்சாவிற்கான பரிசோதனை அல்லது மருத்துவமனையில் அனுமதி என்று எதுவும் தேவையில்லை. இந்த அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
3 ஆம் வகை பிரிவினர் அதாவது தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி இருப்பவர்கள், இரத்த அழுத்த குறைவு இருப்பவர்கள், இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை இருப்பவர்கள் தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய்கள் இருப்போர் இவர்களுக்கு உடனடியாக இன்புளுயன்சாவை கண்டறிவதற்கான RT PCR பரிசோதனை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்கள் கண்டிப்பாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகங்களில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் இருப்பவர்களும் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.