பரபரப்பு!! தமிழ்நாடு முழுவதும் இன்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, புதிய ஓய்வூதிய முறை ரத்து போன்ற பல கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோரிக்கையின் அவசியத்தை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் தமிழ்நாட்டில் ஒரு நாள் முழுவதும் அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்று தமிழ்நாட்டு முதல்வர் கூறியும் இன்னும் அந்த கோரிக்கை நடக்கவில்லை .
புதிய பென்ஷன் திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மாநிலத்தில் அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக தரவேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டதன் படி உடனடியாக காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், திட்டங்கள் குறித்து கடந்த வாரம் வெளியான பட்ஜெட்டிலும் திட்டங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தீர்வு கிடைக்காவிடின் ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.