Movie prime

ஆளுநர் ஒப்புதல்!! ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் வெளியீடு!!

 
online gambling
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பல இளைஞர்கள், தொழிலதிபர்கள், இன்ஜினீயர்கள் என்று பல்வேறு தரப்பினர் பல லட்சம் ரூபாய் மற்றும் சொத்துக்களை இழந்துள்ளனர்.
online gambling
மேலும், இதுவரை 46 க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்துள்ளனர். நாளாக நாளாக இந்த எண்ணிக்கை உயரும் அபாயம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 2022 செப்டம்பர் 26 ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் பிறப்பித்தார்.

அதன் பின்னர் அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 130 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து, கடந்த மார்ச் 23 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
online gambling
இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் பல மாதங்களாக வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய பின், சில மணி நேரங்களிலேயே அந்த மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.