Movie prime

இன்று தமிழ்நாட்டு பொது பட்ஜெட் தாக்கல்!! ₹1000 வழங்கப்படுமா??

 
tn budget

இன்று காலை வரும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டு பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3 ஆவது பட்ஜெட். கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில், 2023 மார்ச் 31 நிலவரப்படி தமிழக அரசின் நிலுவை கடன் தொகை ₹6 ,53 ,348 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. பற்றாக்குறை ₹52 ,781 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், மாநில வரி வருவாய்களில் அதிக வருவாயை தரக்கூடிய வணிக வரித்துறை வருவாய் 2023 மார்ச் 31 ஆம் தேதியில் ₹1,06,765 கோடியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த மாதமே வணிகவரித்துறை இந்த இலக்கை கடந்து சாதனை படைத்தது. பிப்ரவரி 28 அன்று வணிக வரித்துறை வருவாய் ₹1,17,438 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருவாய் மார்ச் மாதத்தில் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tn budget

கடந்த 13 ஆம் தேதி வணிகவரித் துறை அமைச்சர் பேட்டி அளித்த போது, “கடந்த ஆண்டைவிட வணிகவரித் துறையில் ₹24,528 கோடி ரூபாய் கூடுதலாகவும், பதிவுத்துறையில் ₹3,588 கோடி ரூபாய் கூடுதலாகவும், இரண்டு துறைகளையும் சேர்த்து ₹28,116 கோடி ரூபாய் கூடுதலாக அரசுக்கு வருவாய் வந்துள்ளது. மார்ச் 'மாதம் முடிவில் இந்த நிதியாண்டின் மொத்த வருவாய், மத்திய அரசின் இழப்பீட்டுத் தொகையையும் சேர்த்து, ₹1,50,000 கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசிடமிருந்து ரூபாய் 5 ஆயிரம் கோடி வரை ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வர வேண்டும்" என்று கூறினார்.

இதன்படி பார்த்தால், நிர்ணயித்த இலக்கை விட வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது மாநில வரி வருவாய் ₹1,42 லட்சம் கோடியாக இருக்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது கணக்கிடப்பட்டது. ஆனால் அதைவிட கூடுதலாக மாநில வரி வருவாய் இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டில் பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், கடன் நிலுவை தொகை ₹6 லட்சத்து 53 ஆயிரத்து 348 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கடன் நிலுவையிலும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

money

பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக படித்துக் காட்டப்பட்டது. பட்ஜெட் உரையை கேட்டு, அதில் சில திருத்தங்களை முதல்வர் பரிந்துரைத்தார். அதன்பிறகு பட்ஜெட் அறிக்கை அச்சுக்கு சென்றுள்ளது என்கிறார்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், அதற்கு முன்பாக மக்களின் மனங்களை கவர வேண்டியுள்ளதால் மக்கள் மனங்களை குளிர வைக்கும் வகையில், குறிப்பாக பெண்களை கவரும் வகையில் இருக்கும் என்கிறார்கள். நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு  மாதம் ₹1000க்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.